
கோலாலம்பூர், ஆக 23 – அன்வார் மதமாற்ற சடங்கை செய்த விவகாரம் தொடர்பாக காணொளி வெளியிட்டதற்காக புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அனைத்துலக மனித உரிமை அரவாரியத்தின் தலைவர் சசி குமார், தனது கைப்பேசியை ஒப்படைக்கச் சொன்னதால் அங்கிருந்து வெளியேறினார்.
இன்று காலை 11 மணிக்கு புக்கிட் அமானுக்குச் சென்றிருந்த அவரிடம், ரகசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கைப்பேசியை பறிமுதல் செய்யப் போவதாக கூறியது அதிர்ச்சியை தந்ததாக கூறியுள்ளார்.
எனது கைபேசியை ஏன் நீங்கள் பறிமுதல் செய்ய வேண்டும் என வினவியப்போது, இது எங்களின் நடைமுறை என்று பதிலளித்த அந்த அதிகாரி எவ்வளவு நேரம் கைப்பேசியை வைத்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு ஒரு மாதக் காலம் என கூறியதாக சசி தெரிவித்துள்ளார்.
எனது முக்கிய ஆவணங்கள், குடும்ப புகைப்படங்கள் இதில் இருப்பதோடு, வேலைக்கும் இக்கைப்பேசியை நான் பயன்படுத்துகிறேன். எனவே கைப்பேசியை ஒப்படைக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அந்த காணொளி வேண்டும் என்றால் அதை நான் கொடுத்திருப்பேன் என அவர் குறிப்பிட்டார்.
இதன் பின் மீண்டும் நாளை காலை விசாரணைக்காக தான் புக்கிட் அமான் செல்லவிருப்பதாக சசி கூறியதாக உள்ளூர் இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதே விவகாரம் தொடர்பில், அருண் துரைசாமியும் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.