
பத்து பஹாட், நவம்பர் 3 – வாகனத்தை தவறாக நிறுத்திய குற்றத்திற்காக அபராதம் விதிக்க முற்பட்ட, அமலாக்க அதிகாரி ஒருவரின் பணிக்கு இடையூறை ஏற்படுத்தியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், விசாரணைக்காக கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை மணி 3.50 வாக்கில், பத்து பஹாட் நகராண்மைக் கழகத்திடமிருந்து புகார் பெறப்பட்டதை, பத்து பஹாட் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் இஸ்மாயில் டோல்லா உறுதிப்படுத்தினார்.
நேற்று காலை மணி 11 வாக்கில், வாகனம் நிறுத்துமிடத்தில், “கூப்பனை” முறையாக காட்சிக்கு வைக்கத் தவறிய கார் ஒன்றுக்கு எதிராக, அமலாக்க அதிகாரி ஒருவர் அபராதம் வெளியிட முயன்ற போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
33 வயது ஆடவர் ஒருவர் அவரது பணிக்கு இடையூறை ஏற்படுத்தியதோடு, தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அமலாக்க அதிகாரியை அவ்வாடவர் மோட்டார் சைக்கிள் மீது தள்ளி விடும் காணொளி ஒன்றும் வைரலாகியுள்ளது.
எனினும், அங்கிருந்த பொதுமக்கள் அவர்களுக்கு இடையிலான சண்டையை விலக்கி விட்டுள்ளனர்.
அச்சம்பவத்தில் சிறு காயங்களுக்கு இலக்கான அவ்விரு ஆடவர்களும், பின்னர் சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில் பின்னர் சிகிச்சை பெற்றனர்.
அரசாங்க ஊழியரின் பணிக்கு இடையூறை ஏற்படுத்தியதோடு, கடுமையாக நடந்து கொண்டதற்காக, குற்றவியல் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஈராண்டுகள் சிறைத் தண்டனை அல்லது பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.