Latestஉலகம்

அமெரிக்கப் பொருட்களுக்கு ‘பழிவாங்கல்’ வரியா? சீனாவின் ‘தப்பாட்டம்’ டிரம்ப் சாடல்

வாஷிங்டன், ஏப்ரல்-5 – அமெரிக்கப் பொருட்களுக்கு “பழிவாங்கும் வரிகளை” விதித்ததற்காக சீனாவை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.

பதற்றத்தில் சீனா தவறாக முடிவெடுத்துள்ளது; இது அந்நாடு செய்யக் கூடாத தவறு என, தனது சமூக ஊடகத் தளமான Truth Social-லில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படுமென, நேற்று சீனா அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

ஏப்ரல் 4 முதல் அமெரிக்காவிற்கு சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் உள்ளிட்ட நடுத்தர மற்றும் கனரக அரிய மண் தாதுக்களின் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளையும் பெய்ஜிங் அறிவித்தது.

அமெரிக்கா மொத்தமாக விதித்துள்ள 54% வரிக்கு பதிலடியாக அவ்வறிவிப்பு வெளியானது.

அமெரிக்காவின் நடவடிக்கை “வழக்கமான ஒருதலைப்பட்ச கொடுமைப்படுத்துதல் நடைமுறை” என்றும், இது சீனாவின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைக் குறைத்து மதிப்பிடுவதற்கு சமம் என்றும் பெய்ஜிங் சாடியது.

எனவே, அமெரிக்கா எங்களுக்கு விதிக்கும் வரியில் கிட்டத்தட்ட பாதியளவை அவர்களுக்கும் விதிப்போமென சீன அரசாங்கம் கூறியது.

அது குறித்தே டிரம்ப் அவ்வாறு கருத்துரைத்தார்.

இவ்வேளையில், அமெரிக்காவால் கூடுதல் வரி விதிக்கப்பட்ட நாடுகளில் முதல் நாடாக வியட்நாம் அந்த உலக போலீஸ்காரர் நாட்டிடம் ‘மண்டியிட்டுள்ளது’.

தங்களால் சமாளிக்க முடியாது என்பதால், மொத்த வரியையும் சுழியமாகக் குறைத்து விடுமாறு வியட்நாம் கோரிக்கை விடுத்தது.

டிரம்ப்புடனான தொலைப்பேசி உரையாடலில், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் To Lam அக்கோரிக்கையை முன் வைத்தார்.

அதற்கு நன்றித் தெரிவித்துக் கொண்ட டிரம்ப், விரைவிலேயே To Lam-மைச் சந்திப்பதாகவும் சொன்னார்.

முன்னதாக, பேச்சுவார்த்தைகளுக்கு அவகாசம் அளிக்க, வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 46% என்ற பரஸ்பர வரி விகிதத்தை 1 முதல் 3 மாதங்கள் வரை ஒத்தி வைக்குமாறு அமெரிக்காவிடம் வியட்நாம் கேட்டுக் கொண்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!