
மலாக்கா, ஏப்ரல்-6- அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியால் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி சிறிய அளவிலான தாக்கத்தைச் சந்திக்கக் கூடுமென்பதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புக் கொண்டுள்ளார்.
மற்ற நாடுகளும் இதனால் பாதிக்கப்படவே செய்யுமெனக் கூறிய அவர், வட்டார பொருளாதார உரிமையை நிலைநாட்ட ஆசியான் உணர்வுடன் அதன் உறுப்பு நாடுகள் எழுச்சிப் பெற வேண்டுமென்றார்.
மலேசியப் பொருட்களுக்கு 24% வரி விதித்த அமெரிக்காவின் நடவடிக்கையால், நாட்டின் பொருளாதாரம் சந்திக்கப் போகும் அழுத்தங்களை எதிர்கொள்வது குறித்து, வெள்ளிக்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
வர்த்தக நாடு என்ற முறையில் மலேசியா ஏற்றுமதியை அதிகம் நம்பியுள்ளது; குறிப்பாக semiconductor துறையில் அமெரிக்காவுடனான மலேசியாவின் வாணிபம் 200 மில்லியன் டாலராக உள்ளது.
எனவே, நாட்டின் நலனை முன்னிறுத்தி இவ்விவகாரத்தை தைரியமாகவும் அதே சமயம் சுமூகமான முறையிலும் பேசித் தீர்க்க வேண்டுமென்றார் அவர்.
மலாக்காவில் தேசிய அளவிலான மடானி நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு சொன்னார்.
இவ்வேளையில் உலக நாடுகளுக்கான கூடுதல் வரி விதிப்பானது, ஒரு பொருளாதார மறுமலர்ச்சி என அதிபர் டோனல்ட் டிரம்ப் வருணித்துள்ளார்.
“சக அமெரிக்கர்களே, சற்று பொறுத்துக் கொள்ளுங்கள், இது சுலபமான பயணம் அல்ல, ஆனால் கடைசியில் நாம் அறுவடை செய்யப் போவது வரலாறாகும்” என தன் மக்களுக்கு டிரம்ப் நம்பிக்கையூட்டினார்.
“காலங்காலமாக நாம் முட்டாள்களாகவும் நிராயுதபாணியாகவும் இருந்து வந்துள்ளோம்.இனியும் அது நடக்காது, நமக்கான உரிமைகளையும் நியாயத்தையும் கேட்டுப் பெறுவோம். இதுவரை நீங்கள் சந்தித்திராத அளவுக்கு வேலை வாய்ப்புகளும், வர்த்தக வாய்ப்புகளும் கொட்டும்” என டிரம்ப் மேலும் கூறினார்.
இறக்குமதிப் பொருட்களுக்கு குறைந்தபட்சம் 10% வரியை அறிவித்து அதிரடி காட்டிய டிரம்ப்பின் நடவடிக்கையை அமெரிக்கர்களே இரசிக்கவில்லை என முன்னதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தனது அறிவிப்பை தற்காக்கும் வகையில் டிரம்ப் சமூக ஊடகப் பக்கத்தில் அவ்வாறு எழுதியுள்ளார்.