
கோலாலம்பூர், ஏப்ரல்-6- Apple நிறுவனத்தின் கைப்பேசிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விரைவில் வேறு கைப்பேசி மாடல்களுக்கு மாறக்கூடும்.
பல்வேறு நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பேரளவில் வரி விதித்திருப்பதே அதற்குக் காரணம்.
டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள கூடுதல் வரிச் சுமையை வாடிக்கையாளர்கள் மீது Apple இறக்கி வைக்கும் பட்சத்தில், iPhone கைப்பேசிகளின் விலைகள் 30% முதல் 40% வரை உயரலாமென ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பெரும்பாலான iPhone கைப்பேசி மாடல்கள் சீனாவில் தயாரிக்கப்படுவதே இதற்கு முக்கியக் காரணமாகும். கூடுதல் வரி விதிப்பில் மோசமாகப் பாதிக்கப்பட்டதே சீனா தான்; மொத்தமாக 54% விழுக்காடு வரியை அந்நாட்டுக்கு டிரம்ப் விதித்துள்ளார்.
ஒருவேளை ஆய்வாளர்களின் கணிப்பின் படி 43% விலை உயர்ந்தால், iPhone 16 வரிசையின் அடிப்படை மாடலின் விலை 5,100 ரிங்கிட்டையும், பிரீமியம் iPhone 16 Pro Max மாடலின் விலை 10,281 ரிங்கிட்டையும் எட்டலாமெனக் கூறப்படுகிறது.
கூடுதல் வரிகளை டிரம்ப் அறிவித்த நாளன்று Apple நிறுவனத்தின் பங்குகள் 9.3% சரிந்தது குறிப்பிடத்தக்கது. 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு Apple பங்கு மதிப்பில் அவ்வளவுப் பெரிய சரிவு ஏற்பட்டது இதுவே முதன் முறையாகும்.