வாஷிங்டன், டிச 30 – அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் தனது 100 ஆவது வயதில் காலமானார். 1977 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம்ஆண்டுவரை அமெரிக்காவின் 39ஆவது அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர் இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கிடையே கேம்ப் டேவிட் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டதற்காக நோபல் பரிசை பெற்றவரும் ஆவார். ஜோர்ஜியாவின் சிறு நகரான Plains சில் 2023 ஆம் ஆண்டு முதல் தனது வீட்டில் இருந்தவரும் கார்ட்டர் குடும்பத்தினர் சுற்றியிருந்த வேளையில் அமைதியாக அவரது உயிர் பிரிந்ததாக கார்ட்டர் மையம் உறுதிப்படுத்தியது. 100 வயதுவரை வாழ்ந்து வந்த அமெரிக்காவின் ஓய்வு பெற்ற ஒரே அதிபராக கார்ட்டர் இருந்துவந்தார். எனினும் 2015ஆம் ஆண்டு அவர் புற்றுநோய்க்கு உள்ளானார். ஜிம்மி கார்ட்டருடன் கடைசிவரை 77ஆண்டுகாலம் அவரது வாழ்க்கை துணைவியாக இருந்துவந்த ரோஸ்லின் தனது 96 ஆவது வயதில் 2023 ஆம் ஆண்டு இறந்தார். அந்த தம்பதியருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
1980 ஆண்டுகளின் தொடக்கத்தில் ஈரான் தூதரகத்தில் 52 அமெரிக்க பிரஜைகள் பிணையாக பிடிக்கப்பட்ட விவகார நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதில் தோல்வி கண்டதால் ஜிம்மி கார்ட்டர் தனது செல்வாக்கை இழந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டவாது தவணையாக தனது பதவியை தற்காத்துக் கொள்வதில் ஜிம்மி கார்ட்டர் குடியரசு கட்சியின் வேட்பாளரான ரோனல்ட் ரேகனிடம் தோல்வி கண்டார். இதனிடையே ஜிம்மி கார்ட்டரின் மறைவைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மற்றொரு நிலவரத்தில் அமெரிக்க மக்கள் ஜிம்மி கார்ட்டருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளதாக டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.