
வாஷிங்டன், மார்ச்-8 – அமெரிக்காவின் தென்மேற்கு மாநிலங்களில் பரவி வரும் தட்டம்மை நோயால் இருவர் பலியாகியுள்ளனர்.
இதுவரை 200-க்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவியுள்ளது.
இது பத்தாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் பதிவாகும் தட்டம்மை நோய் பரவலாகும்.
வெள்ளிக்கிழமை வரையில் டெக்சஸ் மாநிலத்தில் 198 சம்பவங்களும், நியூ மெக்சிகோ மாநிலத்தில் 10 சம்பவங்களும் பதிவாகின.
மொத்தமாக 208 நோய் தொற்று சம்பவங்களுடன், 2 மாநிலங்களிலும் தலா ஒரு மரணம் பதிவாகியுள்ளது.
இருவருமே தடுப்பூசி போடாதவர்கள்.
இதில் நியூ மெக்சிகோவில் இறந்தவருக்கு, மரணத்துக்குப் பிறகே அவருக்கு தட்டம்மை உறுதியானது.
நோய் வேகமாகப் பரவி வருவதால், மேலும் ஏராளமான சம்பவங்கள் பதிவாகுமென, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியது.
வசந்த காலமும் கோடை காலமும் நெருங்கி வருவதால், தட்டம்மைப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை அம்மையம் வலியுறுத்தியது.
இதனால் சுகாதார அதிகாரத் தரப்பு பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
தட்டம்மை எளிதில் தொற்றக்கூடியதாகும்; நோயால் பாதிக்கப்பட்டவர் ஓரிடத்தை விட்டுச் சென்ற 2 மணி நேரங்கள் வரை, அவரின் சுவாசத் துளிகள் காற்றில் கலந்து பரவியிருக்கும்.
நோய் தொற்றியவர்களுக்கு,
காய்ச்சல், சுவாசப் பிரச்னை, சொறி சிரங்கு போன்ற அறிகுறிகள் காணப்படும்.
ஆனால் கைமீறியச் சம்பவங்களில் நிமோனியா, மூளை வீக்கம், மரணம் உள்ளிட்ட கடுமையான சிக்கல்களுக்கும் இது வழிவகுக்கும்.