
வாஷிங்டன், பிப்ரவரி-27 – EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப் போவதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார்.
அமெரிக்காவை அழிப்பதற்கே EU அமைக்கப்பட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
அக்கூடுதல் வரி விதிப்பு தொடர்பில் முடிவெடுக்கப்பட்டு விட்டது; விரைவிலேயே அது அறிவிக்கப்படுமென, மீண்டும் அதிபரான பிறகு தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய போது டிரம்ப் சொன்னார்.
கார்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கு அந்த 25 விழுக்காடு வரி விதிக்கப்படுமென்றார் அவர்.
வாணிபத்தில், உலக நாடுகளால் அமெரிக்கா நியாயமாக நடத்தப்படுவதில்லை என்ற தனது குற்றச்சாட்டை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
27 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியமே அதற்கு சிறந்த உதாரணம்; அவ்வமைப்பு அமெரிக்கத் தயாரிப்புக் கார்களையும் பண்ணைப் பொருட்களையும் ஏற்றுக் கொள்வதில்லை; ஆனால் நாங்கள் மட்டும் அவர்களிடமிருந்து அனைத்தையும் வாங்க வேண்டுமா என டிரம்ப் கேள்வி எழுப்பினார்.
ஐரோப்பிய ஒன்றியம் தற்போது அமெரிக்க வாகன இறக்குமதிகளுக்கு 10 விழுக்காடு வரியை விதிக்கிறது; இது ஐரோப்பிய பயணிகள் கார் இறக்குமதிக்கான அமெரிக்க வரியை விட 4 மடங்கு அதிகமாகும்.
அதே சமயம், இறக்குமதி செய்யப்படும் பிக்-அப் (pickup) லாரிகளுக்கு அமெரிக்கா 25 சதவீத வரியை விதிக்கிறது.
இவ்வேளையில், டிரம்ப்பின் பேச்சுக்கு பதிலடி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம், நியாயமற்ற வர்த்தகத் தடைகளுக்கு எதிராக உறுதியாகவும் உடனடியாகவும் எதிர்வினையாற்றுவோம் என சூளுரைத்தது.