
வாஷிங்டன், செப் 26 – அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் களம் இறங்கியிருக்கும் விவேக் ராமசாமி தற்போது பொதுமக்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வுக்குப் பின் விவேக் ராமசாமியிடம் பேசிய தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஒருவர், அடுத்த அதிபராக உங்களை பார்க்க விரும்புகிறேன். அதற்காக வாழ்த்துகள் . எனது பெற்றோரும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தார். அப்போது அவருக்கு பதில் அளித்த விவேக் ராமசாமி ” நானும் தமிழ் பேசுவேன். பாலக்காடு தமிழ்” என்று சிரித்தபடி பதில் அளித்தார். விவேக் ராமசாமியின் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த காணொளி வைரலாகி வருகிறது.
ஏற்கனவே குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கான வேட்பாளராக போட்டியிடவிருப்பதாக முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்திய வம்சாவளிகளான 38 வயதுடைய விவேக் ராமசாமி மற்றும் நிக்கி ஹாலே ஆகியோரும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ஆதரவு திரட்டி வருகின்றனர். அண்மையில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான கருத்துக் கணிப்பில் டோனல் டிரம்ப் முதல் இடத்தையும் விவேக் ராமசாமி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஒவ்வொரு கட்சியிலும் அதிபர் தேர்தலுக்கு போட்டிடுபவர்கள் முதலில் உட்கட்சியின் சார்ப்பில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும். அதன்பின்னர்தான் அதிபர் பதவிக்கு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிட முடியும். அமெரிக்காவின் 20 இளம் கோடிஸ்வரர்களின் பட்டியலில் ஒருவராக இருந்துவரும் விவேக் ராமசாமி தற்போது 95 கோடி அமெரிக்க டாலர் சொத்து மதிப்பை கொண்டுள்ளார். மருந்து நிறுவனத்தின் உரிமையாளராக இருந்துவரும் விவேக் ராமசாமி குடியரசு கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றால் ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கு கடும் போட்டியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.