
வாஷிங்டன், ஏப்ரல்-2 – அமெரிக்க சுகாதாரத் துறையிலிருந்து 10,000 வேலையாட்களை நீக்கும் தனது ‘பெருந்திட்டத்தை’ சொன்னபடியே செயலாக்கத் தொடங்கியுள்ளார் அதிபர் டோனல்ட் டிரம்ப்.
இதுவரை, நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவு, உணவு மற்றும் மருந்து மாத்திரைப் பிரிவு, தேசிய சுகாதாரக் கழகம் ஆகியவற்றில் சத்தமில்லாமல் அவ்வேலை நடைபெற்று வருகிறது.
உள்ளுக்குள் நடக்கும் விஷயம் அறிந்த சிலரும் பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்களும் அதனை வெளியே கசிய விட்டுள்ளனர்.
நேற்று வாஷிங்டனில் உள்ள சுகாதார சேவைத் துறைக் கட்டடத்தில் அது இலேசாக தெரிய வந்தது.
வழக்கம் போல் காலையிலேயே வேலைக்கு வந்த ஊழியர்கள் வெளியிலேயே நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதாயிற்று.
கூடுதல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்ததே அதற்குக் காரணம்.
பணியாளர்கள் தத்தம் வேலை அட்டையைக் காட்டுமாறுக் கேட்டுக்கொள்ளப்பட்டு, வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் வந்த வழியே திருப்பியனுப்பட்டனர்.
வரிசையில் நின்றவர்களில் அப்படி எத்தனைப் பேர் திருப்பியனுப்பப்பட்டார்கள் எனத் தெரியவில்லை.
மற்றவர்களுக்கு, மின்னஞ்சல் வாயிலாக வேலை நீக்கக் கடிதங்கள் பறந்துள்ளன.
ஆனால், அம்முடிவுக்கு அடைவுநிலையோ, சேவைத்தரமோ, நடத்தையோ காரணமல்ல என அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளதாம்.
மாறாக, கட்டாய விடுப்பு என்ற பெயரில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இதுவரை சம்பந்தப்பட்ட துறைகள் அதிகாரப்பூர்வ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.
அரசாங்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் பேரளவில் பணியாளர்களைக் குறைப்பதே டிரம்ப் மற்றும் அவரின் நெருங்கியப் ‘பங்காளி’ இலோன் மாஸ்க்கின் திட்டமாகும்.
எனினும் அதனை பதவிக்கு வந்த 50 நாட்களிலேயே அவர்கள் தொடங்கியது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.