வாஷிங்டன், டிசம்பர்-29 – அமெரிக்க லாட்டரி ஜேக்போட் சீட்டுக் குலுக்கு வரலாற்றிலேயே மிகப் பெரிய பரிசுத் தொகைகளில் ஒன்றான 1.22 பில்லியன் டாலர் வெல்லப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா மாநிலத்தில் விற்கப்பட்ட லாட்டரி சீட்டுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக, அமெரிக்காவின் பிரபல லாட்டரி குலுக்கல் நிறுவனமான மெகா மில்லியன்ஸ் (Mega Millions) கூறியது.
வெற்றிப் பெற்ற எண்களாக 3, 7, 37, 49, 55, 6 ஆகியவை வெள்ளிக் கிழமை இரவு அறிவிக்கப்பட்டன.
எனினும், இதுவரை யாரும் வந்து பரிசுத் தொகைக்கு உரிமைக் கோரவில்லை.
வெற்றிப் பெற்ற லாட்டரிச் சீட்டு, எரிவாயு நிரப்பும் நிலையமொன்றில் வாங்கப்பட்டுள்ளது; ஆனால் அதனை வைத்திருப்பவர் யார் என்ற தகவல் இல்லை.
அப்படியே வைத்திருந்தாலும், ஜேக்போட் அடித்து ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன தகவல் சம்பந்தப்பட்டவருக்குத் தெரியுமா? பரிசுத் தொகையை வாங்க அவர் முன்வருவாரா என்பதும் கடவுளுக்கே வெளிச்சமென மெகா மில்லியன்ஸ் கூறுகிறது.
ஒவ்வொரு லாட்டரி குலுக்களின் போதும் பரிசுத் தொகைக்கு உரிமைக் கோரப்படாத நிலையில், அந்த தொகை அடுத்த குலுக்கல் தொகையுடன் சேர்க்கப்படும்.
இதுவே, மெகா மில்லியன்ஸ் குலுக்கலில் பரிசு தொகை ‘வாயைப் பிளக்கும் அளவுக்கு’ உயரக் காரணமாக உள்ளது.
அமெரிக்காவில் 45 மாநிலங்களில் லட்டாரி குலுக்கு நடத்தும் மெகா மில்லியன்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில், அது வழங்கிய ஐந்தாவது மிகப் பெரிய பரிசு தொகை இந்த 1.22 பில்லியன் டாலராகும்.
சாதனையாக உள்ள ஆகப் பெரியத் தொகை 2.04 பில்லியன் டாலராகும்; அந்த Powerball லாட்டரி சீட்டும் கலிஃபோர்னியாவில் தான் விற்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.