கோலாலம்பூர், அக்டோபர்-9, அம்னோ மீதான முந்தைய அரசியல் தாக்குதல்களுக்கு பக்காத்தான் ஹராப்பான் (PH) மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை என்ற அம்னோ தலைவரின் கூற்றை, பக்காத்தான் ஹராப்பான் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாஹ்மி ஃபாட்சில் வரவேற்றுள்ளார்.
டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் அக்கருத்து, அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களிடையே நிலவும் ஒற்றுமையைப் புலப்படுத்துவதாக, ஃபாஹ்மி சொன்னார்.
ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு, முதலீட்டு அதிகரிப்பு, வாணிக வளர்ச்சி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, அரசியல் நிலைத்தன்மை பலனளிக்கத் தொடங்கியுள்ளது என்றார் அவர்.
எனவே, ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகள் தங்களுக்கிடையிலான சச்சரவுகளையும் கருத்து வேறுபாடுகளையும் களைந்து, அரசியல் நிலைத்தன்மையைக் காக்க வேண்டுமென, தொடர்புத் துறை அமைச்சருமான அவர் சொன்னார்.
அம்னோ தலைவர்கள், ஒற்றுமை அரசாங்க கூட்டணி கட்சிகளுடன் பொதுவெளியில் அறிக்கைப் போரில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டுமென, துணைப் பிரதமருமான சாஹிட் ஹமிடி நேற்று அறிவுறுத்தியிருந்தார்.
பல ஆண்டுகளாக அம்னோவை அரசியல் ரீதியாக கடுமையாக தாக்கி வந்த பக்காத்தான் ஹராப்பான், அதற்காக அக்கட்சியிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டுமென, அதன் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ நூர் ஜஸ்லான் மொஹமட் (Datuk Nur Jazlan Mohamed) முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.
இதனால் பக்காதான் தலைவர்களும் பதிலடி கொடுக்க, சில நாட்களாக அறிக்கைப் போர் நடைபெற்று வந்தது.
அரசியல் அரங்கில் எதிரும் புதிருமாக இருந்து வந்த அம்னோவும் பக்காத்தானும், 2022 பொதுத் தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டதை அடுத்து, கூட்டணி அரசாங்கத்தை அமைத்து ஆட்சி செய்து வருகின்றன.