Latestமலேசியா

அம்னோவிற்கு மீண்டும் ஆட்சியமைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால் பேரழிவு ஏற்படும்: கூறுகிறார் ராமசாமி

அம்னோவிற்கு மீண்டும் ஆட்சியமைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால் அது பேரழிவை ஏற்படுத்துமென, பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி கூறியுள்ளார். பருவமழை காலத்தில், நாட்டின் 15-வது பொதுத் தேர்தலை நடத்துவது, முட்டாள்தனமான, இரக்கமற்ற கொடூர செயல் என அவர் குறிப்பிட்டார். அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் சாஹிட் ஹமிடி, பொதுத் தேர்தல் இவ்வாண்டு நடத்தப்பட வேண்டுமென தொடர்ந்து நெருக்குதல் அளித்து வருகிறார். வருந்த தக்க வகையில், மழையோ வெயிலோ பொதுத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டுமென அவர் கூறியதை இராமசாமி சுட்டிக் காட்டினார்.

பொதுத் தேர்தல் இவ்வாண்டு நடத்தப்பட்டால், அம்னோ முதன்மை கட்சியாக இருக்கும் தேசிய முன்னணி, வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம்.அதனால் அடுத்தாண்டு வரை காத்திருக்காமல் உடனடியாக நாட்டின் 15-வது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பது டத்தோ ஸ்ரீ சாஹிட் ஹமிடியின் வாதமாகும். அவசரமாக இவ்வாண்டே பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை. அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை நாடாளுமன்றத்தை களைக்க அவகாசம் உள்ளது. எனினும், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில், பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென, அம்னோ தொடர்ந்து பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்பிற்கு நெருக்குதல் அளிப்பது ஏன் என இராமசாமி கேள்வி எழுப்பினார்.

அந்த நெருக்குதலை, சமாளிக்கும் ஆற்றல்கூட பிரதமருக்கு இல்லையா எனவும் அவர் வினவினார்.பொதுத் தேர்தலை நடத்த ஏதுவாக, நாடாளுமன்றம் களைக்கப்பட வேண்டுமென முன் வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியுள்ள, அம்னோ தலைவர்களின் அச்சத்துடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதையும் இராமசாமி சுட்டிக் காட்டினார். முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் குற்றவாளி என தீர்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் மற்றவர்களும் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

டத்தோ ஸ்ரீ நஜிப்பின் மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சூர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், மேல்முறையீடு காரணமாக தண்டனையை நிறைவேற்றுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டத்தோ ஸ்ரீ அஹ்மட் சாஹிட் ஹமிடி ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். அதுபோல, மேலும் சில அம்னோ தலைவர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர். அதனால், தங்களை காப்பாற்றிக் கொள்ளவே, அவர்கள் பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டுமென நெருக்குதல் அளிப்பதாக இராமசாமி சொன்னார்.

அம்னோ அல்லது தேசிய முன்னணிக்கு ஆதரவாக வாக்களிக்கும் மக்கள், ஊழலின் கொடூரத்தையும், அதனால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவையும் உணர்ந்துள்ளனரா என்பது தமக்கு தெரியவில்லை என்றாரவர். பருவமழை காலத்திற்கு பின் அடுத்தாண்டு நாட்டின் 15-வது பொதுத் தேர்தலை நடத்துவதில் எதிர்கட்சிகள் திட்டவட்டமாக உள்ளன என்பதையும் இராமசாமி சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!