
கோலாலம்பூர், ஜன 15 – அம்னோ தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடாது என்று கட்சியின் பொதுப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இறுதியானது என அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார். கட்சியின் இரண்டு உயர்மட்ட பதவிக்கு போட்டி இருக்கக்கூடாது என பேராளர்கள் செய்துள்ள முடிவை அம்னோ உறுப்பினர்கள் மதிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கட்சியின் சட்டவிதிகள் மற்றும் அம்னோ பொதுப் பேரவையின் விதிமுறைகளுக்கு ஏற்பவே பேராளர்களும் நிரந்தர தலைவர் Tan Sri Badruddin Amiruldin – னும் இந்த விவகாரத்தை கையாண்டுள்ளதாகவும் ஸாஹிட் தெரிவித்தார். இதனிடையே தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிருக்கக்கூடாது என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அம்னோ உதவித்தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் கைரி ஜமாலுடின் உட்பட பலர் தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடாது என்றால் கட்சியின் உதவித் தலைவர் உட்பட இதர அனைத்து பதவிகளுக்கும் ஏன் போட்டியிருக்க வேண்டும் என இஸ்மாயில் சப்ரி கேள்வி எழுப்பினார். இந்த முடிவு மறுபரிசீலிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.