Latestமலேசியா

பத்துமலை திருத்தல ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் கலந்து கூடினர்

கோலாலம்பூர், நவ 20 – பத்துமலை திருத்தலத்தில் 140 அடி உயரமுள்ள முருகன் பெருமானின் திருவுருவச் சிலைக்கு அருகில் நிர்மாணிப்பட்டுள்ள ஸ்ரீ மகா துர்க்கையம்மன் ஆலயத்தின் மகா கும்பாஷிஷேகம் நேற்று காலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த 10,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்ட இந்த கும்பாபிஷேகம் நிகழ்வின் உச்ச கட்டமாக காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணிக்குள் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டபோது பக்தர்கள் பத்தி பரவசத்தோடு துர்க்கையம்மனை வணங்கினர்.

தேவஸ்தானத்தின் தலைவரும் , அறங்காவலருமான டான்ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் இந்த கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

தமிழகத்தில் பட்டிஸ்வரன் கோயில் அர்ச்சகர் ராஜா தலைமையில் நமது நாட்டைச் சேர்ந்த சிவஸ்ரீ வேலாயுதம் பட்டர் மற்றும் இதர குருமார்களும் இந்த கும்பாபிஷேகத்தை வெற்றிகரமாக நடத்தினர்.

இந்த கும்பாபிஷேகத்தில் ம.இ.காவின் துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராயுடு மற்றும் அழைக்கப்பட்ட இதர பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கும்பாபிஷேகத்திற்குப் பின் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதோடு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் பரிமாறப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழக இசைக் கலைஞர்களின் கச்சேரியும் நடைபெற்றது.

இதனிடையே இந்த மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களில் பலர் தங்களது மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்து கொண்டனர்.

தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய திருத்தலமாக அமைந்துள்ள பத்துமலையில் தற்போது மாபெரும் மகா துர்க்கையம்மன் சிலையையும் அமைந்திருப்பதன் மூலம் டான்ஸ்ரீ நடராஜா தலைமையிலான தேவஸ்தானம் மற்றொரு வரலாற்றை ஏற்படுத்தியுள்ளது.

இதன் வழி பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரியும் பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!