அம்பாங், செப்டம்பர் -30, அம்பாங் ஜெயா, பாண்டான் பெர்டானாவில் உள்ள கேளிக்கை மையத்திலிருந்து வீடு திரும்ப, ஆடவருக்கு lift கொடுப்பது போல் கொடுத்த கும்பலொன்று அவரை அடித்து உதைத்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
செப்டம்பர் 22-ஆம் தேதி அம்மையத்தில் ஆட்டம் போட்டு விட்டு காலை 6 மணிக்கு மதுபோதையுடன் e-hailing காருக்காக 27 வயது அந்நபர் காத்திருந்தார்.
அப்போது அவ்வழியாக காரில் வந்த 2 பெண்களும் ஒர் ஆணும், அவ்வாடவரை வீட்டில் கொண்டு விட தாங்களாகவே முன் வந்தனர்.
எனினும் போகும் வழியில் அப்பெண்களில் ஒருவரை தொந்தரவு செய்ததாகக் கூறி, காரிலிருந்த ஆடவரால் அந்நபர் ஹெல்மட்டால் தலையில் தாக்கப்பட்டார்.
அடிபட்டவர், தப்பிக்கும் முயற்சியில் ஓடிக் கொண்டிருந்த காரின் கதவைத் திறந்து வெளியே குதிக்க முயன்று காரால் இழுத்துச் செல்லப்பட்டார்.
சில மீட்டர் தூரங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டதில், கன்னம், உதடுகள், கை முட்டி, கால் முட்டி மற்றும் நெஞ்சுப் பகுதியில் அவர் காயமடைந்தார்.
அவரின் கைப்பேசி மற்றும் 100 ரிங்கிட் ரொக்கப் பணத்தோடு அம்மூவர் கும்பல் தப்பிச் சென்றது.
பாதிக்கப்பட்ட ஆடவர் செய்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து அடுத்தடுத்து கைதான சந்தேக நபர்கள் அனைவரும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.