கோலாலம்பூர், பிப் 20 – மூன்றாண்டுகள் தேடலுக்குப் பின்னர் தனது பிள்ளைகளை மீண்டும் சந்தித்த போது, தன்னிடம் சேர விடாமல் பிள்ளைகள் மூளைச் சலவை செய்யப்பட்டதாக வேதனைப்பட்ட லோ சியொவ் ஹொங் ( Loh siew Hong), தனது பிள்ளைகளுடன் சேர்ந்து புதிதாக காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.
அந்த காணொளியில் தனது மூன்று பிள்ளைகளிடமும், அடுத்து யாருடன் இருக்கப் போகிறீர்கள் என லோ கேட்கும் கேள்விக்கு அவர்கள் தாயுடனே இருக்க விரும்புவதாக குறிப்பிடுவதை அந்த காணொளியில் காண முடிகிறது.
இதனிடையே, தனது பிள்ளைகளை மீட்டு தன்னிடமே மீண்டும் ஒப்படைக்கும்படி, லோ செய்திருக்கும் ஆட்கொணர்வு மனு நாளை கோலாலம்பூர் நீதிமன்றத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செகிரா முன்னிலையில் செவிமடுக்கப்படவுள்ளது.
தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவரான லோ , ஏற்கனவே தனது பிள்ளைகளை பராமரிக்கும் முழு உரிமையையும் பெற்றுள்ளார். எனினும், வலுக்கட்டாயமாக மூன்றாம் தரப்பின் கண்காணிப்பில் இருக்கும் தனது பிள்ளைகளை மீட்கவே அந்த ஆர்கொணர்வு மனு செய்யப்பட்டிருப்பதாக, லோவின் வழக்கறிஞர் ஷம்சேர் சிங் தின்ட் தெரிவித்தார்.
மேலும், ஒரு தலைப்பட்சமாக தனது பிள்ளைகள் மத மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராகவும் லோ வழக்கு தொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
14 வயதான தனது இரட்டை மகள்களும், 10 வயது மகனும் பெரியவர்களாகிய பின்னர், தேசிய பதிவுத் துறையுடன் பிரச்சனை ஏதும் வராமல் இருக்கவும் , முஸ்லீம் அல்லாதவர்களை திருமணம் செய்ய முடிவெடுக்கும்போது , சமயம் ஒரு சிக்கலாக உருவெடுக்காமல் இருக்கவும் , தாயாரான லோ விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகையால், சுலோச்சனா, சுலோச்சினி, தட்சணா மூர்த்தி மூவரும், மதம் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் கேட்டு , மூன்று மாநிலங்களின் மத மாற்ற பதிவதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் ஷம்சேர் சிங் தின்ட் தெரிவித்தார்.