
கோலாலம்பூர், அக் 25 – அரசாங்கத்திற்கான அதிகாரப்பூர்வ கடிதங்களை தேசிய மொழியில் எழுதி அனுப்பாமல் வேறு மொழியில் அனுப்பினால், இனி அக்கடிதங்கள் கவனிக்கப்படாது என்பதோடு எழுதியவருக்கே திரும்ப அனுப்பி வைக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.
மலாய் மொழியை வலுப்படுத்தும் நோக்கத்தை இது கொண்டிருக்கும் அதே வேளை, ஆங்கில மொழி அனைத்துலக தொடர்பு மொழியாக இருப்பதால் அம்மொழி ஒதுக்கப்படாது என்றும் அன்வார் கூறியுள்ளார்.
மேலும் உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு பல்கலைக்கழகங்களும் தேசிய மொழியைத் தவிர மற்ற மொழிகளில் கடிதங்களை எழுதினால் அதனை எழுதியவர்களுக்கே திரும்ப அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தாம் நினைவுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
‘நான் ஆங்கில மொழியை சிறுமைப்படுத்தவில்லை. ஆனால் பண்பாட்டு அடிப்படையில் மலாய் மொழிக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தமது இந்த நடவடிக்கை இருப்பதாக’ அன்வார் குறிப்பிட்டார்.
இன்று தேசிய மொழி மற்றும் வாசிப்பு நிகழ்வை தொடக்கிவைத்து பேசியபோது அன்வார் இத்தகவலை வெளியிட்டார்.