
கோலாலம்பூர், செப்டம்பர் 19 – ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வெளியேறியதும், தமக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடு மீட்டுக் கொள்ளப்பட்டதாக, மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார்.
ICU – அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு அதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சையிட் கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று, அரசியல் வேற்றுமைகளை பொருட்படுத்தாமல், பள்ளிகளுக்கு கல்வி அமைச்சு தொடர்ந்து மானியங்களை வழங்கும் போதும், ஒதுக்கீடு தரப்படவில்லை எனும் கண்ணோட்டத்தை சில தரப்பினர் தொடர்ந்து பரப்பி வருவது கவலை அளிப்பதாக, தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோப்பேங் கூறியதை இடைமறித்த சையிட் அந்த குற்றச்சாட்டை முன் வைத்தார்.
எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு இதுநாள் வரை எந்த ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய சையிட் சாடிக், அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் ஏன் 40 லட்சம் ரிங்கிட் என மக்களுக்கு பதில் சொல்லுங்கள் என கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, சலசலப்பு ஏற்பட்டது.
எனினும், மக்களவைத் தலைவரின் தலையீட்டால் நிலைமை வழக்கத்துக்குத் திரும்பியது.