
சர்ச்சைக்குரிய Crack house Comedy கிளப் உரிமையாளர்கள், கருப்புப்பட்டியலில் இருந்து தங்கள் பெயரை அகற்ற கோரி, அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். அந்த முடிவு ஏற்புடையது அல்ல என்பதோடு, தங்கள் வாழ்வாதாரத்தையும் அது பாதித்துள்ளதாக கூறி, Crack house Comedy கிளபின் உரிமையாளர்களான ரிசல் வான் கெய்சல் மற்றும் ஷங்கர் ஆர்.சந்திரம் ஆகியோர் அந்த வழக்கை தொடுத்துள்ளனர்.
குறிப்பாக, Crack house Comedy கிளப் அனுமதியை இரத்து செய்த கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் நடவடிக்கை செல்லாது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமெனவும், கருப்புப்பட்டியலில் இருந்து அந்த கிளபின் பெயர் நீக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக, கடந்தாண்டு ஜூன் நான்காம் தேதி, அந்த கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட 26 வயது Nuramira Abdullah எனும் பெண் சர்ச்சையானார்.
அதனை தொடர்ந்து, கேளிக்கை அனுமதி இன்றி செயல்பட்ட Crack house Comedy கிளப்பை தற்காலிகமாக மூட ஜூலை பத்தாம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வேளை ; அதன் உரிமையாளர்களுக்கு எதிராக, ஜூலை 22-ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. எனினும், பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.