
பெந்தோங், அக் 3 – ராணுவ முகாம்கள், போலீஸ் பயிற்சி மையங்கள், மற்றும் பள்ளிகளுக்கான தங்கும் விடுதிகளில் இறக்குமதி அரசியை பயன்படுத்துவதற்காக அரசாங்கம் 400 மில்லியன் ரிங்கிட் உதவித் தொகையை ஒதுக்கியிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். இதன்வழி உள்நாட்டு சந்தையில் வெள்ளை அரிசியின் விநியோகத்தை 5 விழுக்காடு அதிகரிக்க முடியும். தற்போது ராணுவம், போலீஸ், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கான தங்கும் விடுதிகளில் ஐந்து விழுக்காடு உள்நாட்டு அரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இறக்குமதி செய்யப்படும் அரிசி விலை அதிகரித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு அரிசியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
18 நாடுகள் தங்களது அரிசி ஏற்றுமதியை நிறுத்தியது அல்லது ஏற்றுமதியில் கட்டுப்பாட்டை விதித்த முடிவினால் இப்போது அரிசி பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். விநியோக பிரச்னை இருக்கும் பகுதிகளில் அரிசியை விரைந்து அனுப்பிவைக்கும்படி பாமா எனப்படும் கூட்டரசு விவசாய சந்தை வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார். அதே வேளையில் சந்தையை பதுக்கும் நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்வார் எச்சரித்தார்.