புத்ராஜெயா, மே 6 – மே முதலாம் தேதி அறிவிக்கப்பட்ட அரசாங்க பணியாளர்களுக்கான, 13 விழுக்காட்டுக்கும் கூடுதலான சம்பள உயர்வு இறுதியானது என பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பு “முழுமையற்றது” எனவும், அடுத்தாண்டுக்கான வரவுச் செலவு திட்டத்தில் அது தாக்கல் செய்யப்படாது எனவும் சில தரப்பினரின் கூறி வருவது தொடர்பில், பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.
எனினும், அந்த சம்பள உயர்வு பொது சேவை துறை ஊதிய முறையின் ஆய்வுக்கு உட்பட்டதாகும். அதனால், அமைச்சரவையில் தாக்கல் செய்வது உட்பட மேலும் சில நடைமுறைகளுக்கு அது உட்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் சொன்னார்.
அந்த சம்பள உயர்வு தொடர்பில், ஏன் முழுமையான விவரங்கள் வெளியிடப்படவில்லை என சில தரப்பினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடைமுறை காரணங்களால் மேல் விவரங்களை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை தாம் தெளிவுபடுத்த விரும்புவதாக, பிரதமர் துறையின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.