கோல குபு பாரு, மே 3 – தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் அவதூறுகளைப் பிரச்சார வியூகமாகப் பயன்படுத்தி, அரசாங்கத்தின் எல்லாத் திட்டங்களையும் தவறான முறையில் சித்தரிக்கிறார்கள் என தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துணையமச்சர் டத்தோ ரமணன் கூறியுள்ளார்.
இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக மடானி அரசாங்கம் பல நலத்திட்டங்களின் வழி உதவி வருகிறது.
இருப்பினும், சில தரப்பினர் அத்திட்டங்களை எல்லா சமயத்திலும் குறை கூறி வருவதாகக் கூறினார்.
அதிலும், இந்திய பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும் ஒரு திட்டமான அமானா இக்தியாரை கடனுதவித் திட்டத்தை கூட குற்றம் சாட்டி வருகின்றனர் என டத்தோ ரமணன் தெரிவித்தார்.
இம்மாதம் 11ஆம் தேதி கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், அரசியல்வாதிகள் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புவதையும் உதவித் திட்டங்கள் பற்றி விமர்சனங்கள் செய்வதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நேரத்தில், கோல குபு பாரு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், சவால்கள் ஆகியவற்றை அடையாளம் காணுவதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, வாக்காளர்களின் மீதுதான் கவனம் இருக்க வேண்டும் என்றார்.
இதனிடையே, நேற்று அமானா இக்தியார் பங்கேற்பாளர்களுடனான சிறப்பு சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமரின் துணைவியார் டாக்டர் வான் அசிசாவுக்கு பெண் திட்டம் குறித்து முழுமையாக விளக்கம் அளிக்கப்படுள்ளதையும் டத்தோ ரமணன் சுட்டிகாட்டினார்.
பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினரான வான் அசிசா அந்த திட்டத்திற்கு முழு ஆதரவும் பாராட்டும் தெரிவித்துள்ளதாக கெஅடிலான் தகவல் பிரிவு துணைத் தலைவருமான ரமணன் கூறினார்.