டாக்கா, அக்டோபர்-5 – வங்காளதேசத்தில் ஏற்பட்ட அரசியல் கலவரங்களால் வாய்ப்புகளை இழந்த தொழிலாளர்களின் வேலை விண்ணப்பங்களுக்கு மலேசியா முன்னுரிமை வழங்கவிருக்கின்றது.
நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்த விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் பிரச்னையில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மேலும் அதிகமானவர்களை வேலைக்கெடுக்குமாறும், முடிந்தால் நிபுணத்துவம் வாய்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்குமாறும் வங்காளதேச அரசு மலேசியாவிடம் முறையிட்டுள்ளது என்றார் அவர்.
இவ்வேளையில், உயர் கல்வி, ஹலால் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.
ஒரு நாள் பணிநிமித்தப் பயணமாக டாக்கா சென்றுள்ள டத்தோ ஸ்ரீ அன்வார், அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முஹமட் யூனூசை (Muhammad Yunus) சந்தித்து பேசியப் பிறகு அவ்வாறு சொன்னார்.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, ஆகஸ்டில் யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்ததிலிருந்து வங்காளதேசத்திற்கு வருகை மேற்கொண்ட முதல் வெளிநாட்டுத் தலைவர் அன்வார் ஆவார்.