ஷா ஆலாம், ஆகஸ்ட்-30 – அரசியல் அவதூறுகளில் தேவையின்றி அரண்மனைகளை இழுக்க வேண்டாமென சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா நினைவுறுத்தியுள்ளார்.
3R எனப்படும் இனம், மதம், மலாய் ஆட்சியாளர்கள் தொடர்பில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசி, மக்களின் மனதில் நஞ்சை விதைக்கும் செயலில் யாரும் ஈடுபடக் கூடாது என்றார் அவர்.
இது நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்ட மன்னராட்சி முறையைக் கொண்ட நாடு.
மலாய் ஆட்சியாளர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்; எனவே, அவர்கள் மீதான எந்தவொரு விமர்சனமும் அதற்குண்டான முறைகளில் பண்பு குறையாமல் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
இதுவொன்றும் புதிய விஷயமல்ல; எத்தனையோ முறை நினைவுப்படுத்தப்பட்டு விட்டாலும், ஒரு சில தலைவர்களும், அரசியல்வாதிகளும் அதைக் கேட்பதாக இல்லை.
தொடர்ந்து அது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருவது ஏமாற்றமளிப்பதாக சுல்தான் ஷாராஃபுடின் சொன்னார்.
தேசிய தினத்தை ஒட்டி மாநில மக்களுக்கு வழங்கியச் செய்தியில் அவர் அவ்வாறு கூறினார்.
பெரிக்காத்தான நேஷனல் தலைவரும் முன்னாள் பிரதமருமான தான் ஸ்ரீ முஹிடின் யாசின் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 3 நாட்களில் சுல்தான் ஷாராஃபுடின் அந்த நினைவுறுத்தலை விடுத்துள்ளார்.
கிளந்தான், நெங்கிரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நிந்தனைக்குரிய கருத்தை வெளியிட்டதாக தம் மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை, முஹிடின் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.