
ஜோகூர் ,மே 4 – அரசியல் நிலைத்தன்மையை சீர்குலைப்பதை நிறுத்திவிட்டு மலேசியாவின் சுபிட்சத்திற்கு முன்னுரிமையை வழங்கும்படி மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் Ibrahim Sultan Iskandar வலியுறுத்தியுள்ளார். நடப்பு அரசாங்கத்தின் நிலைத்தன்மை குறித்த அண்மைய தகவல்கள் குறித்து சுல்தான் Iskandar தமது கவலையை தெரிவித்திருக்கிறார். 15ஆவது பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்து ஆறு மாதங்களாகி விட்டபோதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 222 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் ஒன்றினைந்து செயல்பட முடியாமல் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். எல்லாவற்றுக்கும் மேலாக நடப்பு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை சிலர் கவிழ்ப்பதற்கு மேற்கொண்டு வரும் முயற்சியையும் சுல்தான் சாடினார். நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இயலாமை நாட்டின் சமுக மற்றும் பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி அனைத்தலக நிலையிலும் ஆரோக்கியமற்றதாக இருப்பதாக ஜோகூர் சுல்தான் தெரிவித்தார்.