
கோலாலம்பூர், செப் 16 – பெரிக்காத்தான் நேசனலின் புதிய தலைவரான டாக்டர் மகாதீர் முகமட் கீழ் புதிய அரசியல் நெருக்கடியை தவிர்க்க விரும்பினால் அவரை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மிகவும் அணுக்கமாக கவனிக்க வேண்டும் என முன்னாள் கூட்டரசு அமைச்சரான Salleh Said Keruak எச்சரித்திருக்கிறார். எதிர்காலத்தில் மகாதீர் நடவடிக்கை எடுத்தால் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும் என Salleh தெரிவித்தார். மகாதீர் மனதில் ஒரு முடிவை நினைத்தால் அதனை அடைவதற்கான ஒரு அரசியல் நகர்வை நகர்த்தாமல் இருக்க மாட்டார் என
அவர் கூறினார்.
கணிசமான அரசியல் ஆதாயத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தும்போது மட்டுமே மகாதீர் அரசியல் நடவடிக்கையை மேற்கொள்வார் என்று தமது முகநூலில் Salleh தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சி தலைமையிலான மாநிலங்களுக்கு ஆலோசகராக மகாதீரை பெரிக்காத்தான் நேசனல் நியமிக்க விரும்புவதாக நேற்று முன் தினம் Salleh கூறியிருந்தார். 16வது பொதுத் தேர்தலுக்காக காத்திருக்க மகாதீருக்கு நேரமும் பொறுமையும் இல்லை. அவர் தனது அரசியல் நகர்வுகளை அடுத்தடுத்து செயல்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக Salleh தெரிவித்தார். செப்டம்பர் 2ஆம் தேதியன்று பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் நான்கு முதலமைச்சர்களையும் மற்றும் பாஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களையும் டாக்டர் மகாதீர் சந்தித்துள்ளார்.