போர்டிக்சன், ஆகஸ்ட்-17, அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதையடுத்து, விலைவாசி உயர்வு சாத்தியத்தை அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணிக்கும்.
அவ்வறிவிப்பை சாக்காக வைத்து பொருட்களின் விலைகளையும் சேவைக் கட்டணங்களையும் வியாபாரிகள் உயர்த்தாதிருப்பது உறுதிச் செய்யப்படுமென, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் மொஹமட் அலி (Datuk Armizan Mohd Ali) தெரிவித்தார்.
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கும், வியாபார செலவினங்களுக்கும் சம்பந்தமில்லை.
எனவே விலைகளை உயர்த்தினால் வியாபாரிகள் மீது நிச்சயம் நடவடிக்கைப் பாயுமென அமைச்சர் எச்சரித்தார்.
சம்பள உயர்வு வரும் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி தான் அமுலுக்கு வருமென்றாலும், அப்பட்டமாகத் தெரியக் கூடாது என்பதற்காக சில வியாபாரிகள் இப்போதிலிருந்தே விலைகளை உயர்த்தும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை.
ஆகவே, கடுமையானக் கண்காணிப்பும் அமுலாக்க நடவடிக்கைகளும் விரைந்து தொடங்கப்பட வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.
வெள்ளிக்கிழமை காலை அரசு ஊழியர்களுக்கு 15 விழுக்காடு மற்றும் 7 விழுக்காடு சம்பள உயர்வை அறிவித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அதை சாதகமாகப் பயன்படுத்தி பொருட்கள் குறிப்பாக உணவுகளின் விலைகளை உயர்த்த வேண்டாமென வியாபாரிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் நினைவுப்படுத்தியிருந்தார்.