புத்ராஜெயா, ஆகஸ்ட் 16 – அரசு ஊழியர்களுக்கு 15% மற்றும் 7% சம்பள உயர்வை பிரதமர் அறிவித்துள்ளார்.
திட்ட அமுலாக்கத்தினர், நிர்வாகத்தினர், மற்றும் தொழில்முறை பிரிவினருக்கு 15 விழுக்காடும், உயர்மட்ட நிர்வாகத்தினருக்கு 7 விழுக்காடுமாக சம்பளம் உயர்த்தப்படுகிறது.
அது கட்டங்கட்டமாக அமுலுக்கு வரும்.
முதல் கட்டமாக வரும் டிசம்பர் 1-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 2026 ஜனவரி 1-ம் தேதியும் சம்பள உயர்வு அமுலுக்கு வருமென பிரதமர் சொன்னார்.
முதல் குழுவினருக்கான 15 விழுக்காடு சம்பள உயர்வு முதல் கட்டத்தில் 8 விழுக்காடும், இரண்டாவது கட்டத்தில் 7 விழுக்காடுமாக பிரித்து வழங்கப்படும்.
இரண்டாம் குழுவினருக்கான சம்பள உயர்வு முதல் கட்டமாக 4 விழுக்காடும் இரண்டாவது கட்டமாக 3 விழுக்காடுமாக வழங்கப்படும்.
இவ்வேளையில், ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர்களின் கடைசி சம்பள சீரமைப்புக்கு ஏற்ப பென்சன் தொகையும் சீரமைக்கப்படுமென்றார் அவர்.
இப்புதிய சம்பள விகிதத்தின் படி, இரட்டிப்பு அனுகூலத்தை (Compounding effect) கணக்கில் எடுத்துக் கொண்டால் அரசு ஊழியர்களின் வருமான அதிகரிப்பு வரம்பு 16.8 விழுக்காட்டிலிருந்து 42.7 விழுக்காடு வரை இருக்கும் என டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.