புத்ராஜெயா, டிசம்பர்-18 – அரசாங்க ஊழியர்கள் அனைவரும் BMI எனப்படும் சமச்சீரான உடல் பருமன் குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டுமென, பொதுச் சேவைத் துறையான JPA ஒருபோதும் உத்தரவுப் பிறப்பிக்கவில்லை.
அப்படியோர் உத்தரவு இருப்பதாக JPA-வின் பெயரை மேற்கோள் காட்டி, மீரி மருத்துவமனையின் இயக்குநர் Dr ஜேக் வோங் (Jack Wong) டிசம்பர் 7-ம் தேதி வெளியிட்ட அறிக்கையை மறுத்து பேசுகையில், JPA அதனைத் தெளிவுப்படுத்தியது.
அரசு ஊழியர்கள் தங்களின் உடல் எடையையும் உயரத்தையும் சொந்தமாக அளந்து, HRMIS எனும் மனித வள தகவல் தரவுத் தளத்தில் பதிவிடுவதை JPA எப்போதும் ஊக்குவித்து வருகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கில், சுய மருத்துவ விவரங்களை அறிவிக்கும் 2022-ஆம் ஆண்டு சுற்றறிக்கைக்கு ஏற்ப அது அமைகிறது.
அதோடு, மலேசியர்களியையே உடல் பருமன் பிரச்னையைக் குறைக்கும் சுகாதார அமைச்சின் முயற்சிக்கு JPA ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும், அது அமைகிறது.
ஆனால், அதற்காக பொதுச் சேவை ஊழியர்கள் சமச்சீரான BMI குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டுமென அரசாங்கம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
எனவே, எந்தவொரு தரப்பும் தகவல்களை உறுதிச் செய்யாமல், JPA-வின் பெயரைக் குறிப்பிடக் கூடாது என்றும் அவ்வறிக்கை நினைவுறுத்தியது.