கோலாலம்பூர், ஆக 5 – அடுத்த வாரம் முதல் அரசு ஊழியர்கள் தங்கள் சம்பள உயர்வு விகிதங்களை SSPA எனப்படும் பொது சேவை ஊதிய அமைப்பின் கீழ் சரிபார்த்து கணக்கிடலாம். ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அரசு ஊழியர்களுக்கான 19ஆவது Majlis Amanat நிகழ்ச்சியில், அரசு ஊழியர் சம்பள சீரமைப்பு செயல்திட்ட விவரங்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என்று பொது சேவைத் துறையின் நடவடிக்கைக்களுக்கான துணை இயக்குநர் டத்தோ முகமட் ஷைபுல் இப்ராஹிம் ( Datuk Mohd Shaiful Ibrahim) தெரிவித்தார்.
அந்த நிகழ்வில் பொதுச் சேவை ஊழியர்கள் தங்களது சம்பள உயர்வு விகிதங்களைக் கணக்கிட விரும்பினால், நாங்கள் கணக்கீடு சேவையையும் வழங்குவோம் என்று அவர் கூறினார். டிசம்பர் முதல் அனைத்து அரசு ஊழியர்களும் புதிய சம்பள விகிதங்களைப் பெறுவார்கள் என்று Bernama TV யின் Apa Khabar Malaysia நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் கூறினார்.
SSPA வின் கீழ் சம்பள சீரமைப்பு அனைத்து கூட்டரசு அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும், விரைவில் இது குறித்த சுற்றறிக்கையை PSD வெளியிடும் என்றும் முகமட் ஷைபுல் கூறினார். மாநில அரசு ஊழியர்கள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஊராட்சி மன்றத்தின் கீழ் உள்ளவர்கள் திருத்தப்பட்ட SSPA ஐ ஏற்றுக்கொள்ள விரும்பினால், அது அவர்களுக்கும் பொருந்தும் என்று முகமட் ஷைபுல் தெரிவித்தார்.