
கோலாலம்பூர், ஜன 1 – அரசாங்க சேவை ஊழியர்களில் இன்னமும் சிறு பிரிவினர் பொறுப்புணர்வு இன்றி லஞ்ச ஊழழை தொடர்வதால் அவர்களுக்கு எதிராக கடுமையான போக்கு கையாளப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார். முன்னாள் தலைவர்கள் குவித்திருக்கும் சில கோடிக்கணக்கான ரிங்கிட்டை திரும்ப மீட்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்றும் அவர் கூறினார். அரசாங்க சார்புடைய நிறுவனங்களின் செலவுகள் கண்காணிக்கப்படுவதுடன் ஊழலை துடைத்தொழிக்கும்படி அமலாக்க நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக அன்வார் கூறினார்.
அரசாங்க சேவை மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் சிறு தரப்பினர் பொறுப்புணர்வின்றி இன்னும் பழைய பாணியிலேயே செயல்பட்டு வருகின்றனர். பரிசுகளை பெற்றுக் கொள்கின்றனர். ஒரு சிலர் தேவையற்ற செலவினங்களை செய்கின்றனர். நாட்டை அழிவுக்கு கொண்டு செல்லும் பொறுப்பற்றவர்களுடன் தாம் எந்தவொரு இணக்கப் போக்கையும் கொண்டிருக்கப் போவதில்லை என்றும் அன்வார் தெரிவித்தார். ஒரு சிலர் நாள் ஒன்றுக்கு 40 ரிங்கிட்டைத்தான் வருமானமாக பெறுகின்றனர். ஆனால் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப சிலர் தினசரி 40 லட்சம் ரிங்கிட்வரை எடுத்துச் செல்வதற்கு நாம் அனுமகிக்கிறோம் என புத்ரா ஜெயாவில் நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அன்வார் தெரிவித்தார்.