
செம்போர்னா, செப்டம்பர் 7 – டால்பின்களை காண்பது, பலருக்கும் ஓர் அரிய வாய்ப்பாகவே கருதப்படுகிறது.
அந்த வகையில், சுமார் நூறு டால்பின்களை மிக அருகில் நின்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்களை அதிஷ்டசாலிகள் என்றுதானே சொல்ல வேண்டும்?
நேற்று, பிற்பகல் மணி இரண்டு வாக்கில், நீருக்கடியில் இருக்கும் அதிசய உலகை ஒளிப்பதிவுச் செய்யும் அப்துல் ரசாக் இஸ்மாயில் உட்பட எட்டு அதிஷ்டசாலிகளுக்கு, சிபாடன் தீவில் அந்த அற்புதமான உயிரினங்களை மிக அருகில் கண்டுகளிக்கும் அரிய வாய்ப்பு கிட்டியது.
அவர்கள் பயணித்த படகிற்கு சுமார் 200 மீட்டர் இடைவெளியில், நூற்றுக்கும் அதிகமான
டால்பின்கள் துல்லி குதித்து நீந்தி சென்றதை அவர்கள் கண்டுள்ளனர்.
அவை இரு டால்பின் இனத்தை சேர்ந்தவை என நம்பப்படுவதாக அப்துல் ரசாக் கூறியுள்ளார். அந்த டால்பின்களில், சிலவற்றின் வயிற்றுப் பகுதியில் இளஞ்சிவப்பு வண்ணம் காணப்பட்ட வேளை ; மேலும் சில கூம்பு தலையுடன் இருந்தன.
2006-ஆம் ஆண்டு தொடங்கி முக்குளிப்பு வீரராகவும் பணியாற்றி வரும் அப்துல் ரசாக், சிபாடன் அல்லது மாபுல் தீவுப் பகுதிகளில், அதுபோன்ற காட்சிகளை காண்பது மிகவும் அரிது என்கிறார்.
அவ்விரு தீவுப் பகுதியிலும், டால்பின்கள் வாழ்கின்றன. எனினும், மனிதர்களின் பார்வையில் சிக்குவது, அவற்றின் மனநிலையைப் பொருத்தது. பல சமயங்களில் அவை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியை நோக்கி சென்று விடும்.
எது எப்படி இருந்தாலும், நூற்றுக்கும் அதிகமான டால்பின்கள் கூட்டமாக நீந்திச் சென்றது சாதாரண நிகழ்வல்ல என்கிறார் அப்துல் ரசாக்.