
கோலாலம்பூர், பிப்ரவரி-20 – மலேசியாவிலிருந்து 4,386 பன்றி மூக்கு ஆமைகளை கடத்த முயன்றதற்காக, KLIA விமான நிலையத்தில் 2 பெண்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய உதவிப் போலீஸாரின் ஒத்துழைப்புடன் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN செவ்வாய்க் கிழமை நடத்திய சோதனையின் போது இந்த ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
வியட்நாமின் ஹனோய் நகருக்குச் செல்லும் விமானத்தில் 2 பயணிகள் இருப்பதாக அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பரிசோதனையில் இறங்கிய போது, அவ்விரு பயணிகளும் அரிய வகை விலங்கினங்கள் நிரப்பப்பட்ட 7 பயணப் பெட்டிகளை உடன் எடுத்துச் செல்வதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சிறிய பிளாஸ்டிக் கொள்கலன்களில் அவை அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
சந்தேக நபர்களிடம், ஏற்றுமதிக்கான முறையான அனுமதிகள் இல்லாத காரணத்தால், 1.75 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அவ்விவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
2010 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010, அழிந்து வரும் உயிரினங்களின் வர்த்தகத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
அவ்விரு சட்டங்களுமே, பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை முறையான அங்கீகாரம் இல்லாமல் ஏற்றுமதி செய்வதைத் தடைசெய்கின்றன.