Latestமலேசியா

ஜொகூரில் மிரட்டிப் பணம் பறித்த 10 போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம்

ஜொகூர் பாரு, பிப்ரவரி 27 – ஜொகூரில் பெண்ணொருவரை மிரட்டி RM 35,000 ரிங்கிட் பணம் பறித்ததன் பேரில் கைதான இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பத்து போலீஸ் வீரர்களும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த 10 பேரும் ஸ்ரீ ஆலாம் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர்கள் என ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷ்னர் எம்.குமார் உறுதிப்படுத்தினார்.

விசாரணைகள் முழுமைப் பெறும் வரை, தற்காலிகமாக அவர்கள் ஜொகூருக்குள்ளேயே வேறு போலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

விசாரணை அறிக்கை முழுமைப் பெற்றதும், மேல் நடவடிக்கையாக அது சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என குமார் சொன்னார்.

விசாரணைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக கூறிய குமார், அதனை முடிக்க தடயவியல் பரிசோதனை முடிவுக்கும், பேங் நெகாராவின் அறிக்கைக்கும் தாங்கள் காத்திருப்பதாக கூறினார்.

போதைப் பொருள் வழக்கில் கைதான தனது தம்பியை விடுவிக்க, போலீஸ்காரர் ஒருவர் தம்மிடம் RM 40,000 ரிங்கிட் பணம் கேட்டு மிரட்டியதாக 41 வயது பெண்ணொருவர் இம்மாதத் தொடக்கத்தில் போலீசில் புகார் செய்திருந்தார்.

ஆனால், தம்மால் வெறும் RM 35 ஆயிரம் ரிங்கிட்டை மட்டுமே புரட்ட முடிந்ததாகவும், புரட்டிய அத்தொகையைக் கொடுத்தும் தனது தம்பியை அவர்கள் வெளியில் விடவில்லை என்றும் அப்பெண் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மிரட்டி பணம் பறித்ததற்காக அந்த 10 சந்தேக நபர்களும் குற்றவியல் சட்டத்தின் 384-வது பிரிவின் கீழ் கைதுச் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!