லங்காவி, ஆகஸ்ட் -25, கெடா, லங்காவியில் வாழும் இந்தியர்களின் குடிநீர் பிரச்னைக்கு, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் (Datuk Seri Ahmad Zahid Hamidi) இந்தியர் நலன்களுக்கான சிறப்பு அதிகாரியான அர்விந்த் அப்பளசாமியால் விடிவு பிறந்துள்ளது.
Taman Sungai Raya, Kampung Belanga Pecah, Kampung Kisah, Kampung Teluk ஆகியப் பகுதிகளில் வாழும் சுமார் 3,000 இந்தியர்கள், கடந்த ஈராண்டுகளாக குடிநீர் விநியோக சிக்கலை எதிர்நோக்கியிருந்தனர்.
பல போராட்டங்களுக்குப் பிறகு நீர் சேவை வழக்க நிலைக்கு திரும்பினாலும், நள்ளிரவு வரை மட்டுமே அது கிடைக்கப் பெற்று வந்தது.
இந்நிலையில் அப்பகுதி வாழ் இந்தியர்களுக்கு குடிநீர் சேவை 24 மணி நேரங்களும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அர்விந்த் தொடக்கக் கட்டமாக Taman Sungai Raya-வில் 3 நீர் சேமிப்புத் தொட்டிகளை அமைத்துள்ளார்.
37,000 ரிங்கிட் செலவில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேமிப்புத் தொட்டிகள் வாயிலாக, மக்களுக்கு தற்போது தண்ணீர் தூய்மையாகவும் விரைவாகவும் கிடைக்கிறது.
தலா 8,000 லிட்டர் நீரை சேமிக்கும் ஆற்றலைக் கொண்ட அத்தொட்டிகளை ‘நமக்கு நாமே’ என்ற கொள்கையின் அடிப்படையில் அமைத்துள்ளதாக அர்விந்த் கூறினார்.
மற்ற பகுதிகளிலும் இது போன்ற நீர் சேமிப்புத் தொட்டிகள் அடுத்தடுத்து நிறுவப்படுமென்றார் அவர்.
3 மாதங்களுக்கு முன்பு தான் அர்விந்த் காதுகளுக்கு அப்பிரச்னையைக் கொண்டுச் சென்றோம்.
இந்த குறுகிய காலத்தில் அவர் உரியத் தீர்வை ஏற்படுத்தித் தந்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக குடியிருப்பாளர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.