
கவனக் குறைவு அல்லது அலட்சியப் போக்கால், தங்கள் பிள்ளைகளை முறையாக கண்காணிக்க தவறும் பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு எதிராக, 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். அதனால், பிள்ளைகளை முறையாக பராமரிப்பதோடு, அவர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்குமாறு, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி பெற்றோர்களையும், பராமரிப்பாளர்களையும் கேட்டுக் கொண்டார். அதே சமயம், பிள்ளைகள் கண்காணிப்பு இன்றி கைவிடப்படும் சம்பவங்கள் குறித்து, அண்டை அயலாரும், ஓர் இடத்தில் வசிப்பவர்களும் சமூகநலத் துறையிடம் புகார் செய்யலாம் என ஓர் அறிக்கையின் வாயிலாக அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக, சிலாங்கூர், கோம்பாக்கில், வீடொன்று தீக்கிரையான சம்பவத்தில் உயிரிழந்த பத்து வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட இரு சகோதரர்களின் குடும்பத்தாருக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சொன்னார்.