
முஸ்லீம் அல்லாதவர்கள், அல்லா உட்பட காபா, சோலாட், பைத்துல்லா ஆகிய நான்கு வார்த்தைகளை பயன்படுத்த அனுமதி வழங்கிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை, அரசாங்கம் மீட்டுக் கொண்டது.
அரசாங்கத்தையும், உள்துறை அமைச்சையும் பிரதிநிதிக்கும், மத்திய அரசாங்கத்தின் வழக்கறிஞர் தரப்பு, ஏப்ரல் 18-ஆம் தேதி, அந்த மேல்முறையிட்டை மீட்டுக் கொள்ளும் மனுவை தாக்கல் செய்ததை, அரசாங்க மூத்த வழக்கறிஞர் ஷம்சுல் போல்ஹாசன் உறுதிப்படுத்தினார்.
அரசாங்கத்துக்கும், சரவாக்கை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையில் நீடித்த 13 ஆண்டு கால நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னர், அல்லா எனும் வார்த்தை உட்பட இதர மூன்று வார்த்தைகளை, முஸ்லீம் அல்லாதவர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் தீர்ப்பை, 2021-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி, உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ நோர் பீ அரிபின் வழங்கினார்.
35 ஆண்டுகளுக்கு முன், அந்த நான்கு வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு தடை விதித்த உள்துறை அமைச்சின் உத்தரவு சட்டவிரோதமானது எனவும் பகுத்தறிவு அற்ற செயல் எனவும் நோர் பீ தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
அதோடு, 1984-ஆம் ஆண்டு அச்சு மற்றும் பதிப்பு சட்டத்துக்கு அது முரணானது எனவும் அவர் தமது தீர்ப்பில் அறிவித்தார்.
2008-ஆம் ஆண்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், ‘அல்லா’ எனும் வார்த்தை அடங்கிய எட்டு குறுந்தட்டுகளை, உள்துறை அமைச்சு பறிமுதல் செய்த நடவடிக்கை செல்லாது என கோரி, சரவாக்கை சேர்ந்த மெலனாவ் எழுத்தாளரான பெண் ஒருவர் வழக்கு தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.