
புது டெல்லி, மார்ச்-26- அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்த 6 குரங்களை மலேசியாவிலிருந்து இந்தியாவிற்குள் கடத்தும் முயற்சியை, பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அந்த அரிய வனவிலங்குகள் கோலாலம்பூருக்கே திருப்பி அனுப்பப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரிலிருந்து பெங்களூருவின் கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் ( Kempegowda International Airport) வந்திறங்கிய ஓர் இந்திய பயணியிடமிருந்து, 4 சியாமாங் கிபோன் (Siamang Gibbon) குரங்குகள் மற்றும் 2 வடக்கு பன்றி-வால் மக்காக்கு குரங்குகள் (northern pig-tailed macaques) பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த 6 குரங்குகளும் சாக்லேட்டுகள் மற்றும் துணிகளுக்கு இடையில் ஒரு நகரும் trolley பயணப் பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்தன.
அவையனைத்தும் மறுநாளே மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதை, விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இத்தனைக்கும், சந்தேக நபர் கோலாலம்பூரில் விமானத்தில் ஏறும் நேரத்தில் பயணப்பெட்டியை சரிபார்த்து, பரிசோதனைகளைக் கடந்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான அந்நபர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.