Latestமலேசியா

68 ஆண்டுகளுக்குப் பிறகு மலாக்காவில் வானைப் பிளந்த மெர்டேக்கா முழக்கம்

மலாக்கா, பிப்ரவரி-21 மலாக்கா பண்டா ஹிலிர் 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மெர்டேக்கா முழக்கத்தால் நேற்றிரவு அதிர்ந்தது.

தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் பாடாங் பஹ்லாவானில் முதன் முறையாக மலாயா சுதந்திர பிரகடனத்தை வாசித்த சரித்திரப் பூர்வ நிகழ்வு, நேற்றிரவு நாடக வடிவில் மீண்டும் கண்முன்னே அரங்கேறிய போது தான் அந்த மெர்டேக்கா முழக்கம் விண்ணைப் பிளந்தது.

நாட்டின் சுதந்திரம் முதன் முறையாக மலாக்கா மண்ணில் அறிவிக்கப்பட்ட நாளான பிப்ரவரி 20-ஆம் தேதியை நினைக்கூறும் வகையில் அச்சிறப்புக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக, ஸ்டாட்யுஸ் சிவப்புக் கட்டடத்தில் தொடங்கி சுதந்திர நினைவு சதுக்கம் வரையில் 600 மீட்டர் தூரத்திற்கு சிறப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.

அதற்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை ஏற்றியிருந்த M4442 என்ற பதிவு எண்ணைக் கொண்ட பழக்காலத்து கார் தலைமையேற்றது. பிரதமருடன் மலாக்கா முதல் அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ராவுஃ யூசோஃபும் உடன் வந்தார்.

1951-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட Nash Rambler Custom ரகத்திலான அக்கார், 1956-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி துங்கு தலைமையில் லண்டனில் இருந்து திரும்பிய சுதந்திர குழுவை ஏற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. துங்குவுடன், அப்போதைய பேராக் சுல்தானின் பிரதிநிதியான டத்தோ பங்லீமா புக்கிட் காந்தாங் உடன் இருந்தார்.

துங்கு அப்துல் ரகுமான் கதாபாத்திரத்தில் அக்காரில் வந்திறங்கிய டத்தோ ஸ்ரீ அன்வார், இளைஞர் அணியின் மரியாதை அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். துன் வீ.தி. சம்பந்தனாக செயல்பட்ட ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பிரதமருக்கு மாலை அணிவிக்க, ம.சீ.ச பொதுச் செயலாளர் கதாபாத்திரத்தில் இருந்த சுற்றுலா கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் உடன் இருந்தார்.

கூட்டரசு மலாயாவின் சுதந்திர நாள் அறிவிக்கப்படும் கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான துன் அப்துல் காஃபார் பாபாவாக செயல்பட்ட மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ரசாக் அப்துல் ரகுமான் முதலில் உரையாற்ற, அடுத்து டத்தோ பங்லீமா காந்தாங் கதாப்பாத்திரத்தில் மலாக்கா முதல் அமைச்சர் உரை நிகழ்த்தினார்.

உச்சக்கட்டமாக, நாட்டின் சுதந்திர பிரகடனத்தை துங்கு அப்துல் ரஹ்மான் கதாபாத்திரத்தில் இருந்த டத்தோ ஸ்ரீ அன்வார் வாசிக்க, மெர்டேக்கா முழக்கம் மும்முறை வானைப் பிளந்தது.

துங்கு கையில் வைத்திருந்த உண்மையான சப்புகோல் கெரிசும் அன்வாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிறகு காலனித்துவ ஆட்சிக் காலம் முதல் சுதந்திரப் போராட்டம் வரை சித்தரிக்கும் இசை நாடகமும் அரங்கேறியது. சீருடை இயக்கங்கள், அரசுத் துறைகள், அரசு சாரா இயக்கங்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என சுமார் 1,500 பேர் அதில் பங்கேற்றனர்.

மலாக்காவில் பிப்ரவரி 20-ஆம் தேதி இவ்வாண்டு தொடங்கி மாநில பொது விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது.

மலாயா கூட்டரசின் சுதந்திரம், கோலாலம்பூர் மெர்டேக்கா அரங்கில், 1957, ஆகஸ்ட் 31-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!