
கோலாலம்பூர், நவம்பர் 1 – நெகிரி செம்பிலானிலுள்ள, MRSM – மாரா அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு உணவோடு சேர்த்து அழுங்கிய முட்டை பரிமாறப்பட்ட சம்பவம் தொடர்பில், முழு விசாரணை அறிக்கையை ஒப்படைக்குமாறு மாரா நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவ்விவகாரம் தொடர்பில், சமூக ஊடகங்கள் வாயிலாக தமக்கு தொடர்ந்து புகார்கள் கிடைக்கப்பெற்று வருவதாக, மாரா தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ராப் வஜ்டி டுசுகி தெரிவித்தார்.
தாம் வெளி நாட்டில் இருக்கும் போது, அவ்விவகாரம் தொடர்பில் முழு விசாரணை மேற்கொள்ளுமாறு, மாரா கல்வி துணை இயக்குனரை பணித்துள்ளதாக அவர் சொன்னார்.
அது போன்ற சம்பவங்கள் இனி மீண்டும் நிகழாமல் இருக்க, கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அதில் சம்பந்தப்பட்ட யாரிடமும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது எனவும் அஷ்ராப் உத்தரவாதம் அளித்தார்.
முன்னதாக, நெகிரி செம்பிலானிலுள்ள, MRSM கல்லூரி ஒன்றில், மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் பரிமாறப்பட்ட சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
அதனால், மாணவர்கள் சிலர் நச்சுணவு பிரச்சனைக்கு இலக்கான வேளை ; கவனக்குறைவாக செயல்பட்டதற்காக சம்பந்தப்பட்ட உணவு விநியோகிப்பாளருக்கு எதிராக கடும் கண்டம் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.