
வகுப்பறையில், ஹரி ராயா விருந்துபசரிப்பின் போது, தனது நற்காலியில் அமர்ந்து அழுது கொண்டிருந்த மாணவரை ஆசிரியர் ஒருவர் சமாதானம் செய்த சம்பவம் இணையப் பயனர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
நீல நிற ‘பாஜூ மெலாயு’ உடையை அணிந்திருக்கும் சம்பந்தப்பட்ட மாணவன், தனது ராயா பலகாரங்களை யாரும் உண்ணவில்லை என அந்த ஆசிரியரிடம் கூறி அழுகிறான்.
அவனை, மிகவும் அன்போடு சமாதானம் செய்யும் அந்த ஆசிரியர், பலகாரம் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை காண்பிக்குமாறு அழைத்துச் செல்வதோடு, அங்கு அவனது பலகாரம் நிரப்பப்பட்டிருக்கும் புட்டி திறக்கப்படாமல் இருப்பதாலேயே யாரும் உண்ணவில்லை என மிகவும் பரிவாக விளக்குகிறார்.
அதன் பின்னர், அந்த பலகாரத்தை சுவைத்து பார்க்குமாறு அங்கிருந்தவர்களுக்கு அந்த ஆசிரியர் அழைப்பு விடுக்கிறார்.
அச்சம்பவம் தொடர்பான 32 வினாடி காணொளி டிக் டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, வைரலாகியுள்ளது.
அந்த காணொளி இதுவரை 40 ஆயிரம் முறை பகிரப்பட்டுள்ள வேளை ; ஆறு லட்சத்துக்கும் அதிகமான ‘லைக்குளை’ பெற்றுள்ளது.