கோலாலம்பூர் டிச 28- தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பாட்சிலுக்கு எதிராக டிக்டோக்கில் அவதூறாக பேசியதற்கு ஷாலினி பெரியசாமி என்ற பெண் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் ஷாலினி பெரியசாமி என்பவர் அமைச்சர் பாமி பாட்சிலுக்கு எதிராக அவதூறாக பேசிய காணொளி வைரலாகியிருந்தது.
அந்தக் காணொளியில் சரவாக் ஊழல் புகாரில் அமைச்சர் பாமி பாட்சில் சிக்கிக் கொண்டுள்ளார் என்று ஷாலினி பெரியசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
இது கர்மாவின் விணை என்று கூறிய அவர் இப்போது அமைச்சர் பாமி பாட்சிலிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“உத்துசான் டிக்டோக்கில் வந்த செய்தியை வைத்து அவருக்கு எதிராக இப்படி குறை கூறிவிட்டேன். உத்துசான் டிக்டோக் செய்தியை முழுமையாக படிக்காமல் அவர் சரவாக் ஊழலில் சிக்கி உள்ளார் என்று கூறி விட்டேன். இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அவர் என் மன்னிப்பை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்ப்பார்க்கிறேன்” என ஷாலினி டிக்டோக் மூலம் விடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.
அண்மையில், இணைய பகடிவதைக் காரணமாக, தற்கொலை செய்துக் கொண்ட ஈஷா விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் 100 ரிங்கிட் அபராதத் தொகையோடு விடுவிக்கப்பட்டவர்தான் இந்த ஷாலினி பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.