கோலாலம்பூர், மே 9 – அஸ்ட்ரா ஜெனெகா கோவிட்-19 தடுப்பூசி விவகாரம் தொடர்பில், சுகாதார அமைச்சு கூடிய விரைவில் அறிவிப்பை வெளியிடும்.
அதுவரை பொறுமையை கடைபிடிக்குமாறு பொதுமக்களை, சுகாதார அமைச்சர் டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மாட் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனினும், அவ்விவகாரம் குறித்து அவர் மேல் விவரம் எதையும் வெளியிடவில்லை.
பிரபல மருந்தக நிறுவனமான அஸ்ட்ரா ஜெனெகா, உலகளவில் கோவிட்-19 தடுப்பூசியை மீட்டுக் கொள்வதாக நேற்று அறிவித்தது.
தனது தயாரிப்பிலான தடுப்பூசி, ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமென ஒப்புக்கொண்ட சில மாதங்களுக்குப் பின்னர், அஸ்ட்ரா ஜெனெகா அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதனால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இனி அந்த தடுப்பூசியை பயன்படுத்த முடியாது எனவும், உலகளவில் கூடிய விரைவில் அது அமலுக்கு வருமெனவும் அஸ்ட்ரா ஜெனெகா கூறியுள்ளது.
முன்னதாக, பக்க விளைவுகளைக் கொண்ட கோவிட்-19 தடுப்பூசி குறித்து சுகாதார அமைச்சு, அஸ்ட்ரா ஜெனெகா மருந்தக நிறுவனத்திடம் விளக்கம் கோரும் என்று ஜுல்கிப்ளி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.