கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் திகதி பூச்சொரிதல் விழா மிகவும் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.
கடந்த ஜூலை 29ஆம் திகதி கோலாலம்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில், ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனை முன்னிட்டு உற்சவத்தின் 10ஆம் நாளான புதன்கிழமை, ஆகஸ்ட் 7ஆம் திகதி ஆடிப்பூரத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அன்றைய நாளில் அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா தேவஸ்தான மகளிர் குழுவினரின் தலைமையில் நடைபெறும் எனத் தேவஸ்தான தலைவர் டான் ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
இவ்விழாவில் மாரியம்மன் சிலை மீது மணமுள்ள பூக்களைத் தூவி பக்தர்கள் வணங்குவர்.
அவ்வகையில், சரியாக மாலை 6:30 மணிக்கு, ஸ்ரீ கோர்ட்டுமலை கணேசர் கோயிலிருந்து பூத்தட்டுகள் ஏந்தி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலை நோக்கி பக்தர்கள் புறப்படுவார்கள் என அதன் ஒருங்கிணைப்பாளரும் தேவஸ்தான மகளிர் குழுவின் தலைவருமான புவான் ஸ்ரீ டத்தின் மல்லிகா நடராஜா கூறினார்.
ஆடிப்பூர உற்சவப் பூச்சொரிதல் நன்னாளில், பக்தர்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகைதந்து, அம்மனைத் தரிசித்து வேண்டிய நல்வரங்களைப் பெற்றுச் செல்லுமாறு ஆலய தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.