
சென்னை, மார்ச் 29 – ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படமான The Elephant Whisperers’ படத்தில் நடித்த யானை பராமரிப்பாளர்களான பொம்மன் – பெல்லி தம்பதியினரை விமான பயணிகள் பாராட்டும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த ஆவணப் படத்தை தயாரித்த படக்குழுவினருக்கு சின தினங்களுக்கு முன்பு மும்பையில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த பாராட்டு விழாவில், அந்த ஆவணப் படத்தின் கதாநாயகர்களான பொம்மனும், பெல்லியும் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, இருவரும் மும்பையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் கோவைக்கு திரும்பியபோது , அவர்களை நெகிழ வைத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
பொம்மனும், பெள்ளியும் இண்டிகோ விமானத்தில் பயணிப்பது விமானிக்கு தெரியவர உடனே அவர் விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து வெளியே வந்து அவர்களை வரவேற்றதோடு, பொம்மனையும் , பெள்ளியையும் பயணிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இது மிகவும் பெருமையான தருணம். இவர்கள் ஹீரோக்கள் அல்ல; நிஜ மனிதர்கள்.அவர்களைப் பாரட்டுவோம் என அந்த விமானி தெரிவிக்க, பயணிகள் கைதட்டி பொம்மனையும் பெள்ளியையும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அந்த உற்சாக வரவேற்பால் மகிழ்ச்சியில் திளைத்த அந்த தம்பதியரின் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது .