
கோலாலம்பூர், செப் 23 – சீனாவின் Hangzhaou நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் தேசிய கபடி குழுவுக்கு துணைப்பிரமர் அகமட் ஸாஹிட் ஹமிடி உதவி வழங்கியுள்ளார். இந்த உதவியை பெறுவதற்கு துணைபிரதமர் அகமட் ஸாஹிட்டின் இந்தியர் நலன் சார்ந்த சிறப்பு அதிகாரியான அர்விந்த் அப்பளசாமி ஏற்பாடு செய்தது குறித்து மலேசிய கபடி குழுவின் நிர்வாகி பீட்டர் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இறுதிக்கட்ட பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் தேசிய கபடி குழுவினைரை அர்விந்த் அப்பளசாமி சந்தித்தார். அப்போது அவரிடம் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனையை தெரிவித்தாகவும் அதனை தொடர்ந்து அவர் சிறு அளவிலான உதவி கிடைப்பதற்கு துணைப்பிரதமரிடம் தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்தது தங்களுக்கு பேருதவியாக இருந்ததாக பீட்டர் கூறினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் தேசிய கபடி குழுவினர் விமானக் கட்டணம் மற்றும் தங்குவது மற்றும் உணவு செலவுகளை சொந்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே பதக்கம் வென்றவர்களுக்கு மட்டுமே ஆசிய போட்டியில் கலந்துகொள்வதற்கு தேசிய விளையாட்டு மன்றம் செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும் ஆசிய போட்டியில் பதக்கம் வென்றால் விமானக் கட்டணம் மற்றும் தங்கும் வசதிக்கான செலவுத் தொகையை தேசிய விளையாட்டு மன்றம் சம்பந்தப்பட்ட விளையாட்டு சங்கங்களுக்கு
செலுத்தி விடும் . அந்த அடிப்படையில்தான் தேசிய கபடி குழுவின் நிலையும் இருந்ததால் துணைப்பிரதமரின் உதவி அர்விந்த் அப்பளசாமி மூலம் நாடப்பட்டதாக பீட்டர் தெரிவித்தார். மலேசியா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், கொரியா, சீனத் தைப்பே, தாய்லாந்து , நேப்பாளம் , ஈராக் ஆகியவை இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்கின்றன. கபடி போட்டிகள் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. மலேசிய கபடி குழுவினர் செப்டம்பர் 26 ஆம் தேதி சீனா புறப்படுவார்கள்.