கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – டாமான்சாரா உத்தாமா இடைநிலைப்பள்ளி மாணவியான தனுஷா மணிமுத்து ஆசியா, மலேசியா சாதனை விருதுகளை ஒரே நேரத்தில் தன் வசமாக்கியுள்ளார்.
ஆசிரியர்களின் மாபெரும் தியாகங்களை போற்றும் வகையில் 101 தலைப்புகளில் இவர் எழுதிய உரைக்கான அங்கீகாரமாக இந்த இரு விருதுகள் கிடைக்கப் பெற்றன.
தனது வாழ்க்கையில் கடந்து வந்த ஆசிரியர்களின் தியாகங்களை போற்றும் வகையில் 101 உரைகளை சுயமாகவே எழுதி, கடந்த மே 26ஆம் திகதி, 2 மணிநேரம் 49 நிமிடங்கள், 54 வினாடிகளில் அவை அனைத்தையும் வாசித்து இச்சாதனையை முறியடித்தாக விவரிக்கிறார் தனுஷா.
நண்பர்களுடன் ஏற்பட்ட கலந்துரையாடலில் உதித்த எண்ணமே, தன்னை இந்த சாதனையைப் படைக்க தூண்டியதாகத் கூறுகிறார் இவர்.
இச்சாதனைக்காக 6 மாதங்கள், 28 நாட்களைச் செலவழித்தையும் நினைவுக்கூர்ந்தார்.
16 வயது மாணவியான தனுஷா, பள்ளி பாடங்களில் மட்டுமல்லாது இணை பாடமாக பல்வேறு திறன் கொண்டவராகவும் சமூகப் பொறுப்புத் திட்டங்கள், நடனம், கவிதை, கதை கூறுதல், டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு தனித் திறமைகளையும் கொண்டுள்ளார்.
இதற்கு முன்பும்
தனது பள்ளியில் செயல்படும் பெண் சாரணர் சீருடை இயக்கமான Pandu Puteri-யின் வழி விருதுகள் கிடைத்துள்ளதாக வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டார்.
பள்ளி பாடங்களிலும், புறப்பாட நடவடிக்கையிலும் சிறந்து விளங்குவதற்கு, தனது நேர நிர்வாகிப்பே காரணம் என கோடிக்காட்டினார்.
தனது ஒவ்வொரு முயற்சிக்கும் சாதனைக்கும் துணையாக நிற்கும் பெற்றோர்களையும் அவர் உள்ளம் மகிழ்ந்து நன்றி மாலைகளைச் சமர்பித்தார்.
எழுத்து, பேச்சு என்றாலே முகம் சுளிக்கும் மாணவர்கள் மத்தியில், அதனை தனது கையில் எடுத்து சாதனையை எட்டிப்பிடித்திருக்கும் தனுஷா மணிமுத்துவிற்கு வணக்கம் மலேசியாவின் மனமார்ந்த வாழ்த்துகள்.