
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-9 – ஓர் ஆடவரை மிரட்டி 18,000 ரிங்கிட் பணத்தைப் பறித்ததன் பேரில், வேலையில்லாத ஆடவர், மாணவர் உள்ளிட்ட 4 நண்பர்கள் இன்று பினாங்கு, ஜோர்ஜ்டவுன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
எனினும், தங்கள் மீதான அக்குற்றச்சாட்டை நால்வரும் மறுத்து விசாரணைக் கோரினர்.
போலீஸ் கைது செய்து விடுமென பயமுறுத்தி 55 வயது பிரபாகரனிடமிருந்து 18,000 ரிங்கிட் பணத்தை அந்நால்வரும் மிரட்டி வாங்கியுள்ளனர்.
குளுகோர், Jalan Helang, டேசா ஆயிர் மாஸ் அடுக்குமாடி வீட்டில் மார்ச் 21-ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு அக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், அபராதம், பிரம்படி ஆகியவற்றில் குறைந்தது 2 தண்டனைகள் சேர்த்தே வழங்கப்படலாம்.
இவ்வேளையில், அந்நால்வரில் இருவர் மீது தனியாக மேலுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சம்பவம் நடந்த அதே நாளில், அதே நேரத்தில், அதே இடத்தில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்ததாக இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கினர்.
அக்குற்றத்திற்கு அதிகபட்சம் ஈராண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
சம்பவ இடத்தில் பிளாஸ்டிக் கைத்துப்பாக்கியை வைத்திருந்த ஒர் ஆடவர் மீது, போலி சுடும் ஆயுதம் வைத்திருந்ததாக மூன்றாவதாகவும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அக்குற்றத்திற்கு அவருக்கு அதிகபட்சம் ஓராண்டு சிறையும், 5,000 ரிங்கிட்டுக்கு மேற்போகாத அபராதமும் விதிக்கப்படலாம்.
மேற்கண்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மே 28-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.