
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13 – தனது மகள் அணிந்திருந்த ஆடை பொருத்தமாக இல்லையெனக் கூறி, அவர் புகாரளிக்க போலீஸ் நிலையத்துக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை என , தந்தை ஒருவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Zahid என அடையாளப் படுத்திக் கொண்ட அந்த பெண்ணின் தந்தை, பத்துமலை அருகில் MRR2 சாலையில் தனது மகளின் கார் கடந்த மாதம் விபத்துக்குள்ளானதாக தெரிவித்தார்.
அந்த விபத்தில் சிக்கிய இரு தரப்பும் போலிசில் புகார் செய்ய இணக்கம் கண்ட வேளை, கோம்பாக் போலீஸ் நிலையத்துக்குள் நுழைய , தனது மகளை பணியில் இருந்த இரு போலீஸ் பாதுகாவலர்கள் அனுமதி தரவில்லை என Zahid கூறினார்.
சம்பவத்தின் போது , தனது மகள் முட்டிக்கு கீழ் பாவாடை அணிந்திருந்ததாகவும், தோள்பட்டைகளை மறைக்கும் வகையில் ஜேக்கட் அணிந்திருந்ததாகவும் அவர் கூறினார்.
பின்னர் தன்னை நீண்ட காற்சட்டையை எடுத்து வரும்படி கூறிய தனது மகள் , அந்த காற்சட்டையை அணிந்த பின்னரே போலீஸ் புகாரளிக்க அவர் அனுமதிக்கப்பட்டதாக சாஹிட் குறிப்பிட்டார்.